மதுரை அருகே கண்மாய் வரத்து கால்வாய் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆய்வு
அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது
மதுரை மாவட்டம், நாகனாகுளம் கண்மாயின் வரத்து கால்வாயினை தூர்வாரும் பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி வழியக்கூடிய வகையில் இந்த ஆண்டு மழை பொழிந்திருக்கின்றது. அதனால், பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தி வருகின்றார். இப்பனிகள் அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய பல்வேறு துறையின் அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தளவில் அனைத்து கண்மாய்களிலும் நீர் நிரம்பியுள்ளது. கண்மாய்களுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கக்கூடிய வகையில், தண்ணீரை கொண்டு நிரப்பக்கூடிய பணியில் ஒரு சில ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் கூட, அவற்றை எல்லாம் அகற்றி இன்றைக்கு கடச்சனேந்தலில் கண்மாய் மற்றும் காமாட்சிபுரம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் மீதான பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களில் தண்ணீர் நிரப்பி, அப்பகுதியில் வசிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கண்மாய்களுக்கும் வழித்தடம் இருக்கின்றது. மாநகருக்குள் பல கால்வாய்கள் இருக்கின்றன. அந்த கால்வாய்களை எல்லாம் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி, ஆட்சிக்காலத்தில் கால்வாய்களில் செல்லக்கூடிய தண்ணீர் மாநகருக்குள் புகாமல் இருப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், ஒரு சில கண்மாய்களுக்கு தண்ணீர் ஓடையின் வழியாக சென்று ஆற்றில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
முன்னதாக, மதுரை மாவட்டம் ராமகிருஷ்ணா மடம் அருகில் உள்ள புளியங்குளம் கண்மாயின் வரத்து கால்வாயினை தூர்வாரும் பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி பார்வையிட்டார்.இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பெரியார் வைகை) .சுகுமாறன் வருவாய் கோட்டாட்சியர்கள்சுகி பிரேமலா (மதுரை) மற்றும் வடக்கு வட்டாட்சியர் .சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.