மதுரை பஸ்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் பார்வையிட்டார்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.அனீஷ் சேகர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முகக்கவசம் விநியோகித்தார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் கொரேனா நோய்தொற்று அதிகமாக பரவி வருகிறது. வாரத்திற்கு 10 நபர்கள் மட்டுமே கொரோனா நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் 50 நபர்கள் கொரோனா நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களும் முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் வேகமாக பரவி வரும் கொரோனா நோய்தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது முகக்கசவம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கண்டறிந்து 200 ரூபாய் அபராத கட்டணமாக வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.
அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒமைக்ரான் நோய்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும், கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாதவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துமனைகளை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வு செய்த போது முகக்கவசம் அணியாத பயணிகளை கண்டறிந்து முகக்கவசம் அணிவதன் நன்மைகள் குறித்து அறிவுரைகள் கூறியதுடன் பயணிகளுக்கு முகக்கவசத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார். மேலும், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)செந்தில்குமார் மற்றும் நகர்நல அலுவலர்ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.