வைகை ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி:அமைச்சர் தொடங்கி வைப்பு

மதுரை மாநகருக்கு ஒரு முன்மாதிரி திட்டமான இந்த தடுப்பணையின் மூலம் 1.36மி.க.அடி தண்ணீர் தேக்க முடியும்.

Update: 2022-02-27 08:30 GMT

வைகை ஆற்றின் குறுக்கே நீர்வழி துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணியினை,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே நீர்வழி துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணியினை,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்வழி துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணியினை,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் (27.02.2022) துவக்கி வைத்தார்.

பின்னர்அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்  கூறியதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றுப்படுகையில் தொடர் நீர்வரத்து இல்லாத காரணத்தினால் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 15 இலட்சங்களை தாண்டிய நிலையில் மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்து கோடை காலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை சமாளிக்க ஏதுவாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை நகருக்கு முன்பு குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி தடுப்பணை தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ள காரணத்தினால் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய தடுப்பணையாது ஆரப்பாளையத்தில் 320மீ நீளத்தில் ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இத்திட்டத்தில் தடுப்பணையின் மேல்புறம் தண்ணீர் நிற்கும் பரப்பில் மூன்று நிலத்தடி செறிவூட்டு துளைகள் அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தவும் மற்றும் நீரின் உவர்ப்பு தன்மையை மாற்றவும் முடியும். இத்திட்டமானது மதுரை மாநகருக்கு ஒரு முன்மாதிரி திட்டமாகும். தடுப்பணையின் மூலம் 1.36மி.க.அடி தண்ணீர் தேக்க முடியும். மேலும், 2கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுமார் 1.25 இலட்சம் மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் வெள்ளதடுப்புச்சுவர் 105மீ நீளத்திற்கு கட்டும் பணியும், ஆற்றின் படுகையை 240மீ நீளத்திற்கு சீரமைக்கும் பணியும் அடங்கும் என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News