கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
மதுரையில் கழிவு நீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகராட்சி உதவி பொறியாளரை கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்:;
லஞ்சம் வாங்கி பிடிபட்ட உதவிப் பொறியாளர் விஜயகுமார்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 56 பொன்னகரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டின் முன்பு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியிருந்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வீட்டின் முன் கழிவு நீர் தேங்கி இருந்ததோடு துர்நாற்றம் இருந்ததால் நோய் தொற்று பரவு அபாயம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கணேசன் இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், கணேசன் 56 ஆவது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் விஜயகுமாருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்த போது அதனை விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக உதவி பொறியாளரை பிடித்து கைது செய்தனர்.