மதுரையில் 2 உயர் மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் 2 உயர் மட்ட பாலங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.;

Update: 2023-10-30 10:06 GMT

மதுரையில்  2 உயர் மட்ட மேம்பாலங்களுக்கு மு. க.முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமானப் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளை , தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில் இரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் இராஜாஜி மருத்துமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாட்டுத் தாவணி - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன.

நகரின் தென் பகுதியிலிருந்து வடபகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இச்சந்திப்பின் வழியாக போக்குவரத்து நடைபெறுவதால் இங்கு கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைத்திட கோரிப்பாளையம் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று , தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் 21.1.2022 அன்று நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்திருந்தார்.

அதன்படி, மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகில் கோரிப்பாளையம்‌ சந்திப்பில்‌ மேம்பாலம் கட்டும் பணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் 1.5.2022 அன்று சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு விழாவில் அடிக்கல் நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, கோரிப்பாளையம் சந்திப்பில் 190.40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோரிப்பாளையம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமையவுள்ளது. இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு அருகில் இணையாக புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக 1.300 கி.மீ நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்துடன் ஒருதிசை வழித்தட மேம்பாலமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்படவுள்ளது. மேலும், கோரிப்பாளையம் சந்திப்பில் பாலத்திலிருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 700 மீட்டர் நீளத்திற்கு இறங்குதளம் 8.50 மீட்டர் அகலத்துடன் அமையவுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடையுடன் கூடிய மழைநீர் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளன. மேலும், பீபீ குளம் - காந்தி அருங்காட்சியகம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு வாகன சுரங்கப்பாதை அமைக்கபடவுள்ளது.

இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்பொழுது கோரிப்பாளையம் சந்திப்பில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க இயலும்.

மதுரை – தொண்டி சாலை ,மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கியமான மாநில நெடுஞ்சாலையாகும்.  

இச்சாலையானது மதுரை மாநகரிலிருந்து சிவகங்கை செல்வதற்கும் மதுரை வட்டச்சாலையை அணுகுவதற்கும் பயன்படுவதால் அப்பல்லோ சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க பல்வேறு இடங்களில் சாலை மேம்பாலம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 21.1.2022 அன்று மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்.

அதன்படி மதுரை – தொண்டி சாலையில் உள்ள அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் ஒன்று அமைப்பதற்கும் மிகவும் நெரிசல் மிகுந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னலை அப்புறப்படுத்தி அப்பகுதியிணை அகலப்படுத்தி வட்ட வடிவ சந்திப்பு அமைப்பதற்கும்150.28 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த மேம்பாலம் 30 தூண்களுடன் மொத்தம் 1100 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.  அதில் நான்கு வழித்தட பாலத்தின் அகலம் 17.2 மீட்டர் ஆகும். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் இருவழித்தட சேவை சாலையாக விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளன.

இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்பொழுது பொதுமக்கள் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க இயலும்.

இந்நிகழ்ச்சியில் , பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News