மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.
அதன் பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.
மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக்கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார்.சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.
திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனாக கார்த்திக் பட்டரும், சுந்தரேசுவரராக பிரபு பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த பிரபு பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.
அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித்திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டு களித்தனர்.
சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர்.
இதை அடுத்து, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது .
இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும்,
மதுரை அண்ணா நகர் வைகை விநாயக ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயக ஆலயத்திலும், மதுரை சர்வேஸ்வர ஆலயத்திலும் , மதுரை இன்மையில் நன்மை தருவார் ஆலயத்திலும், மதுரை அருகே திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மீனாட்சி திருக்கல்யாண முடிந்தவுடன், திருமாங்கல்யத்தை அணிவித்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ,கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.