பணத்துக்காக தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்பட 3 பேர் கைது
மதுரையில் பணத்துக்காக தொழிலதிபரை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
- மதுரை தல்லாகுளம் கமலா 2-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணாராம்.இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அதோடு, அப்பகுதியில் கடைகளையும் கட்டி மாத வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை வாடகை பணம் வாங்கி வந்துள்ளார்.
- இவருக்கு பங்கஜவள்ளி என்ற மனைவியும், நிவேதா என்ற வளர்ப்பு மகளும் உள்ள நிலையில் மகள் நிவேதா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹரிஹரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார்.
- இந்த நிலையில், நேற்று மதியம் மாடி அறையில் தனியாக இருந்த கிருஷ்ணராம் கீழே இறங்கி வரவில்லை. இதனால் மாடிக்கு சென்று பார்த்த பங்கஜவள்ளி அங்கு கழுத்தில் குத்தப்பட்டு கிருஷ்ணராம் படுக்கையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- உடனே, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து, போலீசார் விசாரணையை துவக்கினர். அதில் அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க செயின் மோதிரங்கள் மற்றும் பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதும்தெரியவந்தது.
- மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.விசாரணையில், வளர்ப்பு மகள் நிவேதா அவரது கணவர் ஹரிஹரன், அவரது நண்பர் மானாமதுரையை சேர்ந்த சுரேஷ் என்ற கார்த்திக் ஆகிய 3 பேரும் கொலை செய்தது தெரியவந்தது.
- இதனையடுத்து, காரைக்குடியில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நிவேதா, ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஹரிஹரனை காதலித்து திருமணம் செய்ததாகவும், இதற்கு தந்தை கிருஷ்ணராம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பணம் சொத்து எதுவும் தரமாட்டேன் என கூறியுள்ளார்.
- இதனால், ஆத்திரமடைந்த மகள் நிவேதாவும், -ஹரிஹரனும் கிருஷ்ணராமிடம் வந்து சொத்து மற்றும் கடைகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சொத்துக்களை எல்லாம் ஏதாவது கோயிலுக்கு எழுதி வைத்து விடுவேன் என்று தொழிலதிபர் கிருஷ்ணராம் கூறியதால் கோபமடைந்த மருமகன் - மகள் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, அதன்படி நேற்று மதியம் அவரது வளர்ப்பு மகள் நிவேதா -மருமகன் ஹரிகரன் அவரது நண்பர் சுரேஷ் என்ற கார்த்திக் ஆகிய 3 பேரும் மாடியில் தனியாக இருந்த கிருஷ்ணராமிடம் மீண்டும் சொத்து கேட்டு தகராறு செய்து கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மோதிரங்கள் மற்றும் பணத்தை திருடி விட்டு காரைக்குடிக்கு தப்பியது தெரியவந்தது.
- இச்சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த மதுரை உதவி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் பாலமுருகனை காவல் ஆணையர் செந்தில்குமார் வெகுவாக பாராட்டினார்.