மதுரையில் பகவத் கீதை காட்டும் வாழ்க்கை நெறி குறித்த பயிலரங்கம்
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கோவை ஆர்ச வித்யா குருகுலத்தை சார்ந்த சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசினார்;
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் பேசிய கோவை ஆர்ச வித்யா குருகுலத்தை சார்ந்த சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ் பேசுகையில், "பகவத் கீதை ஒரு சிறந்த ஆன்மீக நூல். இதில் இடம் பெற்ற சிந்தனைகள் அனைத்தும் மனிதர்களை பக்குவப்படுத்தி இறைநிலையை அடைய பேருதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். தேவதாஸ் பேசுகையில், பகவத்கீதை என்றால் “பரம்பொருளின் கீதம்”, என்று பொருள்படுகிறது, அதாவது மனிதனுக்கும் அவன் படைப்பாளிக்கும் இடையே இறையனுபூதி பற்றிய தெய்வீக கருத்து பரிமாற்றம், ஆன்மாவின் மூலமாக பரம்பொருளின் போதனைகள், இது இடைவிடாமல் துதிக்கப்பட வேண்டும். . . . உலகின் அனைத்து உயர் மறை நூல்களின் அடிப்படையாய் உள்ள முக்கிய உண்மைகள், கீதையின் வெறும் 700 சுருக்கமான பாக்களிலுள்ள எல்லையற்ற ஞானத்தில்.பேரண்டத்தின் முழுஞானமும் கீதையினுள் திணித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒப்பற்ற முறையில் ஆழ்ந்து, இருப்பினும் ஆறுதல் அளிக்கும் அமைதி மற்றும் எளிமையோடு கூடிய மொழியில் வெளிப் படுத்தப்பட்டுள்ள கீதை, மனித ஈடுபாடு மற்றும் ஆன்மீக கடும் முயற்சியின் அனைத்து மட்டங்களிலும் புரிந்துகொள்ளப் பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வெவ்வேறு இயல்புகள் மற்றும் தேவைகள் கொண்ட பல்வகைப்பட்ட மனிதர்க ளுக்கு புகலிடம் அளிக்கிறது.
மகாத்மா காந்திக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களில் முதன்மையானது பகவத் கீதை. இவர் லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்த போது பகவத் கீதையை ஆங்கில மூலம் படித்து அதன் தத்துவார்த்த சிந்தனைகளை அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தார். மேலும் இவர் தனது சபர்மதி ஆசிரமத்தில் பகவத்கீதை சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
கோவை ஆர்ச வித்யா குருகுலத்தை சார்ந்த சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி தனது சிறப்பு சொற்பொழிவில், பகவத் கீதை, பக்தியோகம், கர்ம யோகம் மற்றும் தியான யோகம் ஆகிய வழிகளை ஞான யோகத்தை அடைவதற்கான வழிகளைக் காட்டுகிறது. வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய . நன்னெறிகளை புகட்டுகின்றது. இன்றைய இளைய தலைமுறையினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பகவத் கீதையில் இடம் பெற்ற வாழ்வியல் நெறிகளான அன்பு, கருணை, தன்னலமற்ற செயல், தியாகம், மனச்சமநிலை, பொறுமை, அகிம்சை, நேர்மை, தூய்மை, விடா முயற்சி, தற்பெருமையின்மை, சேவை மனப்பான்மை ஆகியவை கற்றுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பகவத்கீதா சுலோகங்கள் அனைவருக்கும் எளிமையான முறையில் கற்றுத் தரப்பட்டது.பகவத் கீதை நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதில் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், அருங்காட்சியக கல்வி அலுவலர் ஆர்.நடராஜன், இயற்கை வாழ்வியல் அறிஞர் தேவதாஸ் காந்தி, நேதாஜி சுவாமிநாதன், சேவாலயம் மாணவர்கள், யோகா மாணவர்கள், பேராசிரியர்கள், காந்திய அன்பர்கள் , அருங்காட்சியாக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, லலிதாம்பிகை அறக்கட்டளை மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் செய்து இருந்தன.