பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி மாணவிகள் பங்கேற்ற பேரணி

Birthday Of Raja Ram Mohan Roy -ராஜாம் மோகன்ராயின் பிறந்தநாளையொட்டி மதுரையில் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2022-10-18 03:15 GMT

Birthday Of Raja Ram Mohan Roy - மதுரை சிம்மக்கல்லில், உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இராஜாராம் மோகன்ராயின் 250-வது பிறந்தநாள் விழாவையொட்டி "பெண்கள் மேம்பாடு" தொடர்பாக மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இராஜாராம் மோகன்ராய் அவர்கள் மே 22 1772-ஆம் ஆண்டு பிறந்தார்.  பெண்களுக்கு நீதி வேண்டும் என்று அரும்பாடு பட்ட முதல் இந்திய மேதை இராஜா ராம் மோகன் ராய்.கணவன் இறந்தால், துணைவன் உடல் எரியும் சிதை நெருப்பிலேயே பெண்கள் துடிதுடிக்க எரிந்துச் சாம்பலாக வேண்டும் என்ற 'சதி' எனும் கொடுமையான மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்து இராஜா ராம் மோகன் ராய் போராடினார். (1829-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இராஜப் பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு வில்லியம் பெண்டிங் உதவியால் 'சதி' திட்டத்தைச் சட்ட விரோதமாக்கி வெற்றி பெற்றார்! சதி திட்டத்தை வீழ்த்திப் பெண்களுக்குரிய நீதியை நிலை நாட்டிய சீர்திருத்த மா வீரராக இராஜராம் மோகன்ராய் திகழ்ந்தார்!)

கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் திட்டத்திற்காக அவர் போராடினார்.பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று இராஜாராம் போராட்டம் செய்தார்.பலமனைவிகள் திருமணத்தைச் சட்ட விரோதமாக்கிட ராம்மோகன் ராய் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவுறுத்தினார்.

பெண்களை விலைக்கு விற்கும் மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்தும், 'பெண் விடுதலை' என்ற இயக்கப் போராட்டத்தை நடத்தியும், இராஜராம் மோகன்ராய் வெற்றி கண்டார். பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் வேண்டும் என வலியுறுத்திஇருபது ஆண்டுகள் வரை மோகன் ராய் ஓயாமல் பத்திரிகைகளில் எழுதினார்.1823-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் நாள் 'பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை' இயற்றி ஆங்கிலேயர் அமலுக்குக் கொண்டு வந்தனர்.ஆனால், இராஜாராம் மோகன் ராய் அவர்களின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, 1835-ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் ஓரளவு தளர்த்தினார்கள்

அந்த வகையில், இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு , இந்திய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் "பெண்கள் மேம்பாடு" தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இப்பேரணியில், கேப்ரான் ஹால் மேல்நிலைப்பள்ளி, வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மங்கையர்கரசி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளி ,அவ்வை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இப்பேரணியானது, மாவட்ட மைய நூலக வளாகத்தில் தொடங்கி குட்செட் தெரு விழியாக கேப்ரான் ஹால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பெண்கள் மேம்மாடு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின் போது, மாவட்ட நூலக அலுவலர்சூ.யசோதா உட்பட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News