6 புதிய ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு: மதுரை எம்பி வரவேற்பு
ஆறு புதிய ரயில்களை மதுரையை மையமாக வைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை ரயில் நிலையத்தை பார்வையிட்ட எம்.பி. வெங்கடேசன்.
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு: மதுரையை மையப்படுத்திய ஐந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்தார்.
சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று, ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின், பொதுப் பெட்டிகளைக் கொண்ட விரைவு இரயில்களை இயக்கினார்கள். அதனை வரவேற்கிறேன். சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று மூன்று சாதாரண பயணிகள் ரயிலையும், மூன்று விரைவு இரயில்களையும் இயக்க தென்னக ரயில்வே, இந்திய ரயில்வே வாரியத்திடம் கோரியுள்ளது.
புதிதாக இயக்க உள்ள பயணிகள் இரயில்கள்: 1. மதுரை - போடிநாயக்கனூர்
2. திண்டுக்கல் - கோவை. 3. திருவாரூர் - காரைக்குடி.
புதிதாக இயக்கவுள்ள விரைவு இரயில்கள்.
1.தாம்பரம் - செங்கோட்டை. 2. மதுரை - இராமேஸ்வரம். 3. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
இவைத்தவிர சென்னை சென்ட்ரல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு வண்டியை போடி நாயக்கனூர் வரை நீட்டிக்க வேண்டுமென்றும், திருவனந்தபுரம் முதல் மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு வண்டியை இராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும் தென்னக இரயில்வே அனுமதி கோரியுள்ளது.தென்னக இரயில்வேயின் இக் கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்று ,விரைவாக உத்தரவிடவேண்டுமென, கேட்டுக்கொள்கிறேன்.
தென்னக ரயில்வேயின் இந்த கோரிக்கைகளில், ஐந்து வண்டிகள் மதுரை சார்ந்து இயங்கும் வண்டிகளாக இருப்பதால், எனது நன்றியை தென்னக ரயில்வேக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் எம்பி. சு.வெங்கடேசன்.