நோயாளிகளை காக்க வைக்காதீர்; உடனே பரிசோதிக்க ஆணையாளர் உத்தரவு
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளை, உடனே பரிசோதிக்க ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.;
சோலையழகுபுரத்தில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா.மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறும், சோலையழகுபுரத்தில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு கால தாமத மின்றி விரைவில் சிகிச்சை மேற்கொண்டு அனுப்புமாறும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் மருத்துவ அலுவலரிடம் கூறினார்.
தொடர்ந்து, சோலையழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவில் ரூ.5.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மின்மோட்டார் பயன்பாடு குறித்தும், சோலையழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண்.89ல் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் சோலையழகுபுரம் பழனியாண்டவர் கிழக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், சோலையழகுபுரம் திருப்பதி நகர் 2வது தெருவில் ரூ.11 லட்;சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் சாலையினையும், சோலையழகுபுரம் குறுக்குத்தெருக்களில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகளின் தரத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகளில் பேட்ஜ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், தொடர்ந்து எம்.எம்.சி.காலனியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு மட்கும் குப்பைகளை உடனுக்குடன் உரமாக்கி குறுகிய காலத்திற்குள் அதனை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.