மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் இன்றி நடந்த ஆவணி மூலத் திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் இன்றி நடந்த ஆவணி மூலத் திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலை
உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில், ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில், சித்திரை திருவிழாவும், ஆவணி மூலத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடந்து வருகிறது.
கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல உற்சவம் 9 - ம் திருவிழா இன்று (ஆக.19 - ம் தேதி வியாழக்கிழமை) சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே, புறப்பாடு செய்யப்பட்டு நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெற்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை மதியம் 1.05 மணி முதல் 1.29 மணிக்குள் நடைபெற்றது. திருக்கோயிலில் பாரம்பரிய பழக்க வழக்கப்படி முற்பகல் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. எனவே, இன்று மாலை 4.00 மணிக்கு வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுப்படி ஆக.20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.