மதுரை குன்னத்தூர் சத்திரம் கானொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த குன்னத்தூர் சத்திரம்
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை மாநகர் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த நகரமாகும். இம்மாநகரில் உலகப்புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்ளுர், வெளியூர், மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு இப்பகுதிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள புதுமண்டப கடைகளில் புத்தகங்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள், திருவிழாக்களுக்கான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நினைவுப் பொருட்களும், அங்குள்ள தையல் கலைஞர்களிடம் ஆடைகள் தைத்துச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள கடைகளால் புதுமண்டபத்தின் புராதன அமைப்புகள் வெளியில் தெரிவதில்லை. எனவே, புராதன சின்னங்களை மேம்படுத்தும் வகையில், வரலாற்று சின்னமான புதுமண்டபத்தின் பாதுகாக்கும் வகையில் , இப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை, குன்னத்தூர் சத்திரம் பகுதிக்கு மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குன்னத்தூர் சத்திரம் மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
புதுமண்டபத்தில் செயல்பட்டு வந்த டெய்லரிங் கடைகள், புத்தகக்கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட கடைகள் இவ்விடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இக்கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் கடைகள் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 190 கடைகளும், 90 டெய்லரிங் கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குன்னத்தூர் சத்திர வணிக வளாக கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர், காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்ததை தொடர்ந்து, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், குத்துவிளக்கேற்றி வணிக வளாகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர்கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், முருகேசபாண்டியன், உதவிப் பொறியாளர்கள் கந்தப்பா,மயிலேறிநாதன் உட்பட மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.