சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய குடியரசுத்தலைவர்

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.;

Update: 2023-08-06 06:20 GMT

மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய குடியரசுத்தலைவர்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து மசினகுடியில் இருந்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டு சென்றார்.

அதன்பின்னர் மைசூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கி ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், இன்று கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கவர்னர் மாளிகையில் உள்ள மைதானத்தில், குடியரசுத்தலைவர்க்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் குடியரசுத்தலைவரை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் சந்திப்புக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார்.

Tags:    

Similar News