இயக்குனர் நியமனம் தொடர்பாக சுகாதார துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநராக சங்குமணி நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரதுறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.;
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த சங்குமணி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் பணி மூப்பு விவரம் சரியாக கடைபிடிக்கவில்லை என புகார் எழுந்தது.
இந்த நிலையில், சங்குமணி எந்த தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமிக்கப்பட்டார் என விளக்கம் அளிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரித் தேவர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவ கல்லூரி இயக்குநர் என்பது, தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக்கியப்பணி என மனுவில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், பணி மூப்பு உள்ளிட்ட எந்த விதிகளும் இல்லாமல் மருத்துவ கல்வி இயக்குநராக சங்குமணி நியமிக்கப்பட்டு உள்ளதாக மாரித்தேவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக சங்குமணி பணியாற்றிய போது கூடுதல் விலைக்கு உபகரணங்கள் வாங்கியதாக புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டு மாரித்தேவர் உள்ளார்.
மருத்துவக் கல்லூரி இயக்குநராக செயல்பட சங்குமணிக்கு தகுதியில்லை என அறிவித்து அவர் செயல்பட தடை விதிப்பதோடு, அவரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் மற்றும் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.