காவல் துறை தொடர்பான வழக்கின் தீர்ப்பை திரும்பப் பெற்ற உயர் நீதிமன்றம்!

காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பை நிர்ணயிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

Update: 2023-03-07 12:43 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், கடந்த 2001 இல் பணியமர்த்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பு வழங்குவது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தை சுட்டிகாட்டி உள்ளார்.

பணி மூப்பு வழங்க பொது அறிவை மட்டும் பரிசோதிப்பதன் மூலம், அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பரிசோதிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்ற தனி நீதிபதி, பணி மூப்பு பட்டியலை மறுபரீசிலனை செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு இருந்தாதாக குறிப்பிட்டு உள்ளார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது என்றும் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ஷாகி மற்றும் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததாகவும் விவேகானந்தன் மனுவில் தெரிவித்து உள்ளார்.

பணி மூப்பு என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று என்றும், பணி மூப்பு விதியை மாற்றி எழுத முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்ததாக மனுவில் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே அந்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் தாக்கல் செய்த மனுவில் விவேகானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளனர். மேலும், காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட சில நபர்களின் பணி மூப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒருவரைப் பற்றிய உத்தரவை மட்டும் திரும்பப் பெறுவது சரியானதாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், முழுத் தீர்ப்பும் திரும்பப் பெறப்படுவதாக உத்தரவிட்டு உள்ளனர்.

இதையெடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News