சேலத்தில் லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-11 13:43 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்தில் உள்ள தென்குமரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் கேட்டு அப்போதைய கிராம நிர்வாக அலுவலராக இருந்த அருணாச்சலத்தை அணுகி உள்ளார்.

சான்றிதழ் வழங்குவதற்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதால் அருணாச்சலத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவான இந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், அருணாச்சலத்தை விடுதலை செய்து கடந்த 2013 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல்முறையீடு மனுவை நீதிபதி வேல்முருகன் இன்று விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி, சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற அருணாச்சலம், பின்னர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறை சாட்சிகளை முழுமையாக ஏற்காமல் அருணாசலத்தை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாகவும் வாதிட்டார்.

அருணாச்சலம் தரப்பில், பல்வேறு உபாதைகளுடன் படுக்கை நிலையிலேயே இருப்பதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அருணாச்சலத்திற்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

அருணாச்சலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், சேலம் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் சிறைத் துறைக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News