காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் அதிகாரம் பறிப்பு.. உயர் நீதிமன்றம் தடை…
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அதிகாரத்தை பறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் சாவித்திரி, துணைத் தலைவராக வனஜா உள்ளார். இவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்கள் கிராம பஞ்சாயத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2.34 ஏக்கர் நிலத்தை சி.ஜி.டி. ஸ்பேஸ் கோர் என்ற தனியார் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றக் கூறி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கடிதம் அனுப்பியதாகக் கூறி உள்ளனர்.
அந்த நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது? அதன் உரிமையாளர் யார்? உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு மனு அனுப்பிய நிலையில், அந்த விவரங்களை வழங்குவதற்கு பதில், கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும், நிதி விவகாரங்களில் கையெழுத்திடும் அதிகாரங்களை நிறுத்தி வைத்த வட்டார வளர்ச்சி அதிகாரி, அந்த அதிகாரங்களை துணை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளதாகக் மனுவில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் சாவித்திரியும், வனஜாவும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் இன்று விசாரித்தார்.
தனியார் நிறுவனத்துக்கு நிலத்தை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றாததால், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவரின் அதிகாரங்களை பறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது எனக் கூறிய நீதிபதி சதீஷ்குமார், அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.