திருச்சி அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை அமைக்க நீதிமன்றம் தடை

திருச்சி அருகே விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-18 12:24 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் நடவலூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பிரதான சாலையில், விவசாய நிலத்தில் புதிதாக மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விவசாய நிலத்தில் கொட்டப்பட வாய்ப்பு உள்ளதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதித்து, விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்றும் பன்னீர்செல்வம் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய டாஸ்மாக் மதுபான கடை அமைய இருக்கும் இடம் அருகே அரசு பள்ளி மற்றும் கோயில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் இயல்பாக செல்ல இயலாத சூழல் ஏற்படும் என்றும், கோயில் மற்றும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ள நிலையில், விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மனுவில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாய நிலத்தில் மதுபான கடைகள் அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதால், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் மதுபான கடையை அமைக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து வழக்கை முடிந்து வைத்தனர்.

Tags:    

Similar News