சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!
சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்கும் உத்தரவு குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச் செயலாளரும் தாவூத் மியாகான் தாக்கல் செய்த அவதூறு வழக்கை யார் விசாரணைக்கு எடுப்பது?, யாருக்கு அதிகாரம் உள்ளது? என்பது குறித்து எழும்பூர் மாஜிஸ்திரேட், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி, தாவூத் மியாகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று (பிப்.24) விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் கடந்த 2020ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கூட அறிவிக்கப்படவில்லை.
எனவே, இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்ததுடன், வழக்கு தொடர்பாக இருவரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.