கீழ்த்தரமான செயல்: ஓபிஎஸ்க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை கீழ்த்தரமான செயல் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்

Update: 2022-08-04 12:40 GMT

ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது அதனை கீழ்த்தரமான செயல் என்றும் விமர்சித்துள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை தொடர்பான மோதல் கடந்த ஜூன் மாத இறுதியில் உச்ச கட்டத்தை எட்டியது. ஜூன் இறுதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பிஎஸ்-ன் பதவிகள் பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடக் கோரி, ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் மீண்டும் விசாரித்து, உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் தரப்பின் செயல்பாடு உள்ளதாகவும் தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம்; திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் எனவும் கூறினார்.

தன்னை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்ற கோரியதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வைரமுத்து தரப்பு கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News