இனி இரவுநேர ஊரடங்கு இல்லை: பிப். 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

தமிழகத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது; பிப். 1 முதல், அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-01-27 14:15 GMT

தமிழகம் முழுவதும் தற்போது, இரவு 10 மணி முதல்,  அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றின் நிலை குறித்தும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் ஆய்வு செய்வதற்காக, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன்,  இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். அதை தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-22022 வரை நடைமுறைப்படுத்தப்படும். சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது, கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் திறக்கப்பட்டு, வரும் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் நேரடியாக நடத்த அனுமதி. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும். 


தமிழகத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்படாது. கேளிக்கை பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகளில் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. துணி, நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 100 பேருக்கு மட்டுமே அனுமதி; இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கலாம். உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கம், இசை, நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

அரசு, தனியார் கலை விழாக்கள், பொருட்காட்சிகள் நடத்த தடை தொடரும். உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளில் 50% பேர் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags:    

Similar News