கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் பல தளர்வுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-02 13:00 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறையானது, நாளை (மார்ச் 3) முதல் வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. மேலும், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். பொது இடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும்.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

Similar News