ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு: வரும் 23ல் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23ம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்படி, கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
எனினும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23,ஆம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறையில் இருந்து வந்த அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு; தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகளை எதையும் தொடரக்கூடாது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அனைத்து மாவட்ட பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து ஆட்டோக்கள் செயல்படலாம்; மொபைல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து வாடகை கார்களில் பயணிக்கலாம் என்று, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.