திருப்பூர் நகருக்குள் நுழைந்தது சிறுத்தை - தாக்குதலில் ஒருவர் காயம்
திருப்பூர் ஊரக பகுதியில் நடமாடிவந்த சிறுத்தை, நகரப்பகுதிக்குள் நுழைந்தது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பான்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது, கடந்த 24ம் தேதி தெரிய வந்தது. அங்குள்ள சோளத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, வன ஊழியர் உட்பட 4 பேரை தாக்கியது.
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்றனர். அவர்களின் கண்காணிப்பை மீறி, பெருமாநல்லுார் அருகே நியூ திருப்பூர் பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்தது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக காரில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் ஊரகப் பகுதியில் இருந்து, திருப்பூர் நகரப்பகுதிக்குள் சிறுத்தை புகுந்தது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாடுகிறது. அங்குள்ள ராமகிருஷ்ணா பள்ளி வளாகம் பகுதியில் சிறுத்தை நடமாடுகிறது.
அப்பகுதியில் ராஜேந்திரன் என்பவரை சிறுத்தை தாக்கியது. பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை, சிறுத்தை 6 பேரை தாக்கிய நிலையில், அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். நகரப்பகுதிக்குள் சிறுத்தை நுழைந்திருப்பதால், திருப்பூர் நகரவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
அம்மாபாளையம் அருகே ஒரு குடோனுக்குள் சிக்கியுள்ளதாகவும், அங்கிருந்து தப்பிக்க வழியில்லை என்பதால் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கவலை படத்தேவையில்லை; எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.