திருப்பூரை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி
திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைத்து அச்சுறுத்திய சிறுத்தை, மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது.
கடந்த 24ம் தேதி, அவிநாசி அருகே பாப்பான்குளம் பகுதியில் , சோளக்காடு ஒன்றில் சிறுத்தை நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்துள்ளனர். அத்துடன், விவசாயிகள், வன ஊழியர் உட்பட 4 பேரை தாக்கியது.
அச்சுறுத்திய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் களமிறக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, சிறுத்தை தப்பியது. அருகாமையில் உள்ள பெருமாநல்லுார் பகுதிக்குள் நுழைந்தது; அங்குள்ள நியூ திருப்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதாக பார்த்து, சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவில் திருப்பூர் ஊரகப் பகுதியில் இருந்து, நகரப்பகுதிக்குள் சிறுத்தை புகுந்தது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கு பணியில் இருந்த தொழிலாளி ராஜேந்திரன் என்பவரை தாக்கியது. பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, குடோன் பகுதி முட்புதரில் பதுங்கிய சிறுத்தை, தப்பிச் செல்ல வழியின்றி, தவித்தது. சரியான தருணம் பார்த்து, சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மடக்கினர். இதன் பின்னர் மயங்கிய நிலையில் இருந்தை சிறுத்தையின் முகத்தை கட்டி, அதனை கூண்டுக்குள் அடைத்து கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக அவினாசி, திருப்பூர் பகுதியினரை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.