முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்: அமைச்சர் சேகர் பாபு
முத்தமிழ் முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி அடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று மட்டும் சுமார் 600 கலைஞர்கள் இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 25,000 பேர் பங்கேற்பார்கள் என நினைத்தோம் ஆனால் லட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாடு அரசின் முருகன் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த மாநாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 1.15 லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். ஆதீனங்கள், நீதியரசர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் முக்கிய பிரமுகர்கள் 2ம் நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ அரசியல் சார்பற்ற, தமிழ்நாடு அரசு எடுக்கும் விழா என்பதோடு இந்து சமய அறநிலையத்துறையும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் இந்த துறைக்கு அந்த கடமை இருக்கிறது என்பதால் தமிழ்நாடு அரசு இந்த விழாவை எடுத்துக் கொண்டுள்ளோம் என்றார்.
மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், முருகனின் ஆயுதமான வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள் தத்ரூபமாக ‘பைபா்’ சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண் மண்டபம் போன்று இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகள் அனைத்தும், சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக உருவாக்கப்பட்டு, பழனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில், சென்னை எழும்பூா் கவின் கலைக் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.
மேலும், கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயா்கள், முருகன் பெயரிலுள்ள பெண்களுக்கான பெயா்கள், தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள புகழ் பெற்ற முருகனின் திருக்கோயில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக் கலன்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம் பெற்றுள்ளன.