3 நாள் பயணமாக இலங்கை சென்ற எல்.முருகன், அண்ணாமலை
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையக் கட்டடத்தின் திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது . அந்த நிகழ்வில் எல். முருகன் , அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர். 11 தளங்களுடன் , 600 நபர்கள் அமரும் வகையிலான திரையரங்குடன் கூடிய அரங்குகளுடன் கலாசார மையக் கட்டடம் அமைந்துள்ளது.
இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னை குறித்து பேசப்படும் எனவும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா – இலங்கை இடையிலான கூட்டுக் கூட்டத்தை மீண்டும் நடத்துவது தொடர்பாகவும் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 1987 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது .