தமிழக அமைச்சரவை மாற்றத்தால் அதிகாரத்தை இழந்த கொங்கு மண்டல அமைச்சர்
தமிழக அமைச்சரவை மாற்றத்தால் கொங்கு மண்டல அமைச்சர் முத்துசாமி தனது முக்கிய அதிகாரத்தை இழந்து உள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. மு.க. ஸ்டாலின் கடந்த 7-5-2021 அன்று தமிழகத்தின் 23வது முதல் அமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கியதில் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. தி.மு.க.விற்காக ஆண்டாண்டு காலமாக உழைத்த மூத்த அமைச்சர்களில் குறிப்பாக துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோருக்கு செல்வாக்கு இல்லாத துறைகள் ஒதுக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும் அவர்கள் அதனை தங்களது மனதில் வைத்து புழுங்கி கொண்டே தான் இருந்தார்களே தவிர வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை மாற்றப்பட்டு அந்த இலாகா பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொடுக்கப்பட்டது. ராஜகண்ணப்பனுக்கு சிவசங்கர் வகித்து வந்த பிற்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது. இது ஸ்டாலின் அமைச்சரவையின் முதல் மாற்றம்.
இந்த நிலையில் தான் தற்போது இரண்டாவது முறையாக மிகப்பெரிய அளவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதுடன் 10 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த துறை இதுவரை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதனிடம் இருந்து வந்தது. அவரிடம் இருந்த இந்த துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் இனி அவர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ற துறை அமைச்சராக மட்டுமே இருப்பார். அமைச்சரவை மாற்றத்தை பொறுத்தவரை இவருக்கு தான் மிக அதிகமான இழப்பு ஆகும்.
இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் பெயர் விவரம் வருமாறு:-
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு.
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு.
சிவ. வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சி.எம்.டி.ஏ. துறை கூடுதலாக ஒதுக்கீடு.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு.
இதுவரை மனப்புழுக்கத்தில் இருந்த மூத்த அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் அவரது மனப்புழுக்கத்திற்கு மருந்து போடப்பட்டு உள்ளது. ஆனால் ஆளுமை மிக்க கே.என். நேரு மற்றும் துரைமுருகன் ஆகியோருக்கு அவர்கள் வகிக்கும் துறையுடன் கூடுதலாக ஏதாவது அதிகாரம்மிக்க துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
அமைச்சரவை மாற்றத்தினால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சு.முத்துசாமி தான். தமிழக வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வரும் இவரிடம் இதுவரை சி.எம்.டி.ஏ. எனப்படும் ஒரு பலம் வாய்ந்த துறை இருந்தது. அந்த துறை தற்போது இவரிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.
சி.எம்.டி.ஏ. எனப்படும் இந்த துறையானது சென்னை மெட்ரோபாலிட்டன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி என்பதாகும். அத்தாரிட்டி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இது ஒரு அதிகாரம் மிக்க துறையாகும். சென்னை பெரு நகரில் எந்த பகுதியிலும் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவது மற்றும் அது தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய துறை ஆகும். இது கோடிகளில் புரளும் ஒரு துறை என்றால் மிகையாகாது.
சி.எம்.டி.ஏ. என்ற அதிகாரம் மிக்க துறையின் தலைவராக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் தான் இருக்க வேண்டும் என்பது மரபாகும். இந்த மரபு தற்போது உடைத்தெறியப்பட்டு முதல் முறையாக அறநிலைய துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஆக இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அமைச்சர் முத்துசாமியின் செல்வாக்கு பிடுங்கப்பட்டு இருப்பது மட்டும் அல்ல தி.மு.க.வில் கொங்குமண்டலத்தின் அதிகாரமும் பறிக்கப்பட்டு உள்ளதாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க.வின் மூத்த முன்னோடியான சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அந்த பதவியில் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டாரே தவிர கொங்கு மண்டலத்தை சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. அன்று கட்சி ரீதியாக கொங்கு மண்டலத்தின் அதிகாரம் பிடுங்கப்பட்டதை போன்று தற்போது ஆட்சியிலும் கொங்கு மண்டலத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டதாகவே இது பார்க்கப்படுகிறது.