கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.

Update: 2023-05-15 09:39 GMT

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது.

இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News