கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா. 4 ஆயிரம் பேருக்கு அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.;
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 23 மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட அதிபர் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பேரும், தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை இலங்கை அரசு மற்றும் கடற்படையும் செய்து தர வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
திருவிழா குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாளில் ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்கு தந்தைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.