முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி - தெரியாத சில சுவையான தகவல்கள் | Karunanithi Birthday
Muthamil Arignar Kalaignar -கலைஞர் மு. கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த சுவையான தகவல்கள்.;
Muthamil Arignar Kalaignar -தமிழ் அறிஞரும், தமிழக அரசியலில் விடிவெள்ளியாகவும் திகழ்ந்தவர், திமுக தலைவரான, முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி. இன்று அவரது 99வது பிறந்த நாளில், அவர் குறித்த சில சுவையான தகவல்கள் இதோ உங்களுக்காக.
- திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் கலைஞர் கருணாநிதி.
- பெற்றோருக்கு கருணாநிதி 3வது குழந்தை. பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் கலைஞருக்கு உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும், முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
- கருணாநிதி, 8ம் வகுப்பு படிக்கும் போது 1939ம் அண்டில் முதல் முறையாக மேடையில் பேசினார். அதன் தலைப்பு 'நட்பு' என்பதாகும்.
- கருணாநிதி, 3 திருமணம் செய்துகொண்டவர். முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்தவர், மு.க.முத்து. இரண்டாவது மனைவி தயாளுவின் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. மூன்றாவது மனைவி ராஜாத்தியின் வாரிசு கனிமொழி.
- கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
- கடந்த 1950களில் தொடங்கி 70கள் வரை, சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்பட பலரின் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதிக்கு, பராசக்தி, மனோகரா, பூம்புகார், மந்திரி குமாரி உள்ளிட்ட சினிமாக்கள் முத்திரையை பதித்தன.
- கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
- கருணாநிதி, 13 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்; ஒரு தேர்தலில்கூட அவர் தோல்வி அடைந்ததில்லை.
- 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று.
- எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.
- உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி.
- கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.
- மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
- ராஜாஜி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சியில் அரசியல் செய்திருக்கிறார் கலைஞர்.
- 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
- வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி சென்னையில் காலமான கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கான இடம் பெறுவதில் நீதிமன்றம் சென்று திமுக வென்றது; இறந்தும் வென்றார் கலைஞர் என்று திமுகவினர் இன்றும் நினைவு கூறுவதுண்டு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2