காஞ்சிபுரம் மக்களவை தொகுதி - ஒரு பார்வை

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.;

Update: 2024-03-16 05:32 GMT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

இந்தியாவின் பாலாற்றின் கரையில் காஞ்சிபுரம் அமைந்துள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன.

ஆயிரம் கோயில்களின் நகரமென அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில்கள் மிகவும் முக்கியமானவை.

சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பல்வேறு சமயப் பிரிவினரும் இங்கு வழிபடுவது இந்து மதத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் (2009), காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.

1951 ஏ. கிருஷ்ணசாமி (காமன்வீல் கட்சி)

2009 பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)

2014 கே. மரகதம் (அதிமுக)

2019 க. செல்வம் (திமுக)

2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் 4,99,395 வாக்குகள் பெற்று காஞ்சிபுரத்தில் மீண்டும் அ.தி.மு.க-வின் கொடியை நாட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் ஜி.செல்வம் 3,52,529 வாக்குகள் பெற்று சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

ம.தி.மு.க-வின் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளை அள்ளி தி.மு.க-வின் வெற்றிக்குக் கடந்த மக்களவைத் தேர்தலில் தடையாக மாறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் வெறும் 33,313 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.

தொகுதி மக்களின் கோரிக்கை

  • கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்ற, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் மத்திய அரசின் சார்பில் உருவாக்கப்பட வேண்டும்
  • தங்கம் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவதால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
  • நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதே போன்று மருத்துவ காப்பீட்டுக்கான தொகையும் உயர்த்தப்பட வேண்டும்.
  • செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
  • மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும்
  • காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வரை கூடுதலாக ஒரு ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும்.
  • செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News