நந்தம்பாக்கத்தில் பொதுமக்கள் தர்ணா: அமைச்சர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு
நந்தம்பாக்கத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நந்தம்பாக்கம் ஐடிபிஎல் பின்புறம் பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு மக்கள் செல்லும் வழிப்பாதையை தற்போது TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், குழி தோண்டி அடைத்து வைத்துள்ளது. இதனால் செல்வதற்கு பாதை இல்லாமல் குடியிருப்பு வாசிகள் கடம் அவதிக்குள்ளாயுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டகாரர்களிடம் மாலை 7 மணியளவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, போராட்டகாரர்களில் ஒருவர் அமைச்சரை இடைமறித்து இப்போதே சாலையை சீர் செய்ய வேண்டும் என கேட்க கோபமடைந்த அமைச்சர் நீயே போய் போடுய்யா என கடிந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாங்களாகவே பள்ளத்தில் மண்ணை அள்ளி மூட முயன்றனர்.