காமராஜர் பிறந்தநாள் விழா- உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி தினமாக ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் இன்று காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது
இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு பொது நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.