கல்லணை: நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக இருக்கும் மகத்தான அணை

Kallanai dam history in Tamil - மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்காமல் மாபெரும் கல்லணையை கரிகாலன் எப்படி கட்டினார்?;

Update: 2022-09-06 05:13 GMT

Kallanai dam history in Tamil 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது. தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து இருக்கிறார்கள்.

சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த கல்லணை எதற்காக கட்டப்பட்டது, கட்டும் போது சந்தித்த இடையூறுகள் என்ன? அதை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கல்லணை, இந்தியாவில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கல்லணை திருச்சி நகருக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவிரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம் இங்கு தான் இரண்டாக பிரிந்து செல்கிறது.

ஏறத்தாழ இது கட்டப்பட்டு 1900 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்றளவும் சோழர்களின் கட்டட புகழை தன் மீது தாங்கி நிற்கிறது கல்லணை. இனி, கல்லணையின் கட்டமைப்பு மற்றும் வரலாறு குறித்து பார்ப்போம்


காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், மிகுதியான நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும் கட்டப்பட்ட முதல் அணை கல்லணை தான். ஏறக்குறைய 2100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டும், இன்றும் பயன்பாட்டில் உள்ளதுதான் கல்லணையின் சிறப்பு.

நாம் கடற்கரையின் ஓரத்தில் நீரில் சென்று நின்றால், அலையடித்து வந்து நம் காலைத் தழுவிச் செல்லும். அலையடித்துச் சென்ற பிறகு, நம் பாதங்களுக்கு கீழ் சிறிது மணல் அரித்து, சிறிய குழி ஏற்படும். இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே, கரிகாலனின் கல்லணை கட்டப்பட்டது. கற்களால் கட்டப்பட்டதால் கல்லணை.

பெரிய பாறைகளும், களிமண் பூச்சும்தான் அந்தத் தொழில்நுட்பம். காவிரியில் நீர்வரத்து குறைவாக வரும் கோடை காலத்தில், ஆற்றில் மிகப்பெரிய எடை கொண்ட பாறையை போட்டால், அது நீரை அரித்து கீழே இறங்கும். அது முற்றிலும் மூழ்குவதற்கு முன்னால் அதன்மீது களிமண் சாந்து பூசப்படும். இப்படி வரிசையாக ஆற்றின் குறுக்கே பாறைகள் போடப்பட்டன. இதே முறையில் அடுத்த அடுக்கு நீர்வரத்து குறைவாக இருக்கும் அடுத்த கோடையில் முதலில் போட்ட அடுக்கின்மேல் போடப்படும். இதனால்தான் கல்லணை கட்ட 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

Kallanai dam history in Tamil தலைப்பிற்காக மட்டும் கல்லணையை, மகத்தான அணை என கூறவில்லை. கல்லணையை அப்படி குறிப்பிட்டவர் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன். அவர் மகத்தான அணை என குறிப்பிடவும் காரணம் இருக்கிறது.

காலப்போக்கில், கரிகாலன் கட்டிய கல்லணை ஒரு பிரச்னையை சந்தித்தது. அதிக நீர் வரவால், மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரி படுகை மேடாக மாறியது. கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வறண்டது. இந்தப் பிரச்சனையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த ஆங்கிலேய அரசு, ஆர்தர் காட்டனிடம் இந்த பணியை ஒப்படைத்தது. 

கரிகாலன் கட்டிய கல்லணையை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய அணைகட்ட பொறியாளர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் ஆர்தர் காட்டனுக்கு மட்டும், இந்தக் கரிகாலனின் கட்டுமானம் எப்படி 1800 ஆண்டுகளைத் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் பிறந்தது.


மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார்? இதனை ஆய்வு செய்த ஆர்தர் காட்டன், அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை 'மகத்தான அணை' என குறிப்பிட்டு இருக்கிறார்.

Kallanai dam history in Tamil பொறியாளர்களால் ஒரு தமிழன் கரிகாலன் கட்டிய அந்த அணையை இடிக்க விரும்பவில்லை அதனால் கரிகாலனின் பழைய அணையையே அடிக்கல்லாக வைத்து புதிய அணையைக் கட்டலாம் என்ற முடிவை எடுத்தவர் ஆர்தர் காட்டன்தான்.

கல்லணை கட்டுமானம் குறித்து ஆர்தர் காட்டன் கூறுகையில், ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை கல்லணை கட்டியவர்களிடம் இருந்துதான் தெரிந்துகொண்டோம். இந்தப் தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்

19-ம் நூற்றாண்டுவரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேலணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. இதைக்கட்டியவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தை, எதிலும் பதிவு செய்துள்ளதாக தெரியவில்லை. கரிகாலனின் தொழில்நுட்ப புதிர் அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகத்துக்குச் சொன்னவர் ஆர்தர் காட்டனே.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இந்த அணையை காண வருகிறார்கள்.


பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News