அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
தமிழக மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த பணத்தை செந்தில் பாலாஜி திருப்பி கொடுத்துவிட்டார். இதையொட்டி புகாரை வாபஸ் பெற ஏற்பாடுகள் நடந்தது. ஆனாலும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது சட்ட விரோதமாக லஞ்சம் பெறப்பட்டதால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதில் நடைபெற்ற முறைகேடு, சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாறில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 14-ம் தேதி கைது செய்தனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போதுசிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் கைது செய்யபட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் (ஜூன் 28-ம் தேதி) இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியிடம் உடல்நிலை குறித்து நீதிபதி அல்லி கேட்டறிந்தார். எப்படி இருக்கிறீர்கள்? என செந்தில்பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி கேட்டார். இன்னும் வலி இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார். இதனையடுத்து ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.