கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-04-26 10:45 GMT

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவருமே தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வந்த விசாரணை , ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை எஸ்டேட் மேலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி , சசிகலா உள்ளிட்ட 220 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

திரைப்படங்களை மிஞ்சும் பாணியில் அரங்கேறிய இந்தக் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை நீலகிரி மாவட்டம் உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி சஞ்சய் பாபா வழக்கை விசாரித்து வந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 58 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் கோடநாடு வழக்கு விசாரணை நடத்தப்படும். 

Tags:    

Similar News