ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்ன? புகழேந்தி பரபரப்பு பேட்டி
ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லாததால் தான் அவர் இறந்ததாக முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்;
முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணைக்கு இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி பேசியதாவது: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுவின் அடிப்படையில் ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று எனது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ், இணைந்த பிறகு ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என ஆணையத்தினை அமைத்தார்கள். ஒபிஎஸ் க்கு 8 முறை சம்மன் அனுப்பட்டது. அதன் பின்னர் ஆஜராகி விசாரணையின் போது தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்ற போது அதற்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று மட்டும் கூறியிருந்தார்.
வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கு ஜெயலலிதாவிடம் பணம் இல்லையா?, நமக்கென்ன என்று எல்லோரும் இருந்ததால் தான் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லவில்லை. வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்காததால் தான் ஜெயலலிதா இறந்தார் என்று கூறினார்.