ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம், துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

மன்சூர் அலிகானை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-30 13:40 GMT

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ள மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வாளி, பலாப்பழம், திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்ட வாளி சின்னம், குலுக்கலில் முறையில் வேறொரு ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி. கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இவருக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி, அவருக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News