அரசு சொத்துக்களின் வாடகை பாக்கி பிரச்சினை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு குத்தகை அடிப்படையிலும், வாடகைக்கும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் வாடகை பாக்கி உள்ளதாகவும், அந்தத் தொகையை அதிகாரிகள் சரியாக வசூலிப்பது இல்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து அங்கு கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், கட்டிடம் சேதமடையவில்லை எனவும், முறையாக வாடகை செலுத்தி வருவதால், காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல எனவும், மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, குத்தகை சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.