புதுச்சேரி தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் 5 பாடப்பிரிவுகள் அறிமுகம்
புதுச்சேரி தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் ஐந்து பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம்) தனது 4-வது மாநாட்டை இன்று (2024 மார்ச் 11) சென்னையில் நடத்தியது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இந்நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நவீனக் காவல் பள்ளியின் இயக்குநர் மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா, தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் மற்றும் இணைப்புப் பிரிவு இயக்குநர் கமாண்டர் மனோஜ் பட், தேசிய பாதுதாப்புப் பலைகலைக்கழகத்தின் புதுச்சேரி வளாக உதவி இயக்குநர் அர்ஷ் கணேசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்தனர். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம் அண்ணாதுரை இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் புதுச்சேரியில் செயல்படும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து விளக்கமளித்தனர். மொத்தம் 200 மாணவர்கள் சேர்ந்து பயிலும் வகையில் வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் செய்முறைப் பயிற்சிக்காக மாநில காவல்துறை மற்றும் இதர பாதுகாப்பு முகமைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காவல் அறிவியல், இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல், பெருநிறுவன பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றில் பட்டயப்படிப்புகள், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்தில் பட்டப்படிப்பு, குற்றவியலில் முதுகலைப் பட்டப் படிப்பு ஆகியவை புதுச்சேரி வளாகத்தில் நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர். இளங்கலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்களும் முதுகலைப் பட்டயப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு, இளநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும் குறைந்தபட்ச தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கல்வி நிறுவனமான இது, 2020-ம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு பள்ளிகள் பற்றிய ஒரு சிறிய அறிமுக வீடியோ இந்த நிழ்ச்சியின்போது திரையிடப்பட்டது. அதன் பின்னர், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், பயிற்சி திட்டங்கள், விரிவாக்க நடவடிக்கைகள், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) குறித்து பல்கலைக்கழக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்கலைக்கழகத்தின் பணிகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.
பாதுகாப்பு கல்வி மற்றும் பயிற்சித் துறையில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (RRU) பங்களிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பதாக இந்த மாநாடு அமைந்துள்ளது.