சென்னை தொலைக்காட்சிக்கு சர்வதேச நடுவர் விருது
பொதிகை தொலைக்காட்சிக்கு சர்வதேச நடுவர் விருதை ஒலிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய பசிபிக் நிறுவனம் வழங்கியுள்ளது.;
பொதிகை தொலைக்காட்சிக்கு சர்வதேச நடுவர் விருதை ஒலிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய பசிபிக் நிறுவனம் வழங்கியுள்ளது.
சென்னை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சி பிரிவு தலைவர் என்.ரகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதார மீட்டுருவாக்கம் பற்றிய சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச நடுவர் விருது, ஜர்தோசி தங்க இழை பூத்தையல் கலை பற்றி பொதிகை தொலைக்காட்சி நிலையம் தயாரித்து ஒளிபரப்பிய “ஒளிரும் புன்னகை – ஜர்தோசி கலையும் கலைஞர்களும்” என்ற ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒலிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய பசிபிக் நிறுவனம் ( Asia pacific Institute for Broadcasting Development) என்ற நிறுவனம் 23.05.2023 அன்று இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் இந்த சர்வதேச விருதினை வழங்கியது.
ஜர்தோசி பூத்தையல் கலையானது ஆசிய பகுதிக்கே உரித்தான கலையாகும். துருக்கி நாட்டில் உருவான இந்த கலை பல ஆசிய நாடுகளுக்கு பயணித்து, இந்தியாவை வந்தடைந்தது. இந்த ஆவணப்படம் ஜர்தோசி கலையின் வரலாறு, வளர்ச்சி, கைவினை கலைஞர்களின் திறமை, இந்த கலையின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்த கருத்துகளை முன்வைத்திருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் சிறிய ஜர்தோசி மையத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படம் ராமன் கிருஷ்ணமாச்சாரி அவர்களின் கருத்தாக்கம் மற்றும் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் ஆர். சந்தானம், ஒலிப்பதிவாளர்கள் டி. டி. விஸ்வநாதன் மற்றும் எஸ். அந்தோனி சாமி அவர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. “25 ஆண்டுகால இடைவெளிக்கு பின் கிடைத்திருக்கும் இந்த சர்வதேச விருது, பொது சேவை ஒளிபரப்பில் சென்னை தொலைக்காட்சி நிலையம் அடைந்திருக்கும் உயர்நிலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது” என்று சென்னை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சி பிரிவு தலைவர் முனைவர். என். ரகு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.