திரைப்படத்துறையினர் நலவாரிய புதிய உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம்

சென்னையில் செய்தித்துறை அமைச்சர் தலைமையில் திரைப்படத்துறையினர் நலவாரிய புதிய உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-07 16:26 GMT

சென்னையில் செய்தித்துறை அமைச்சர் தலைமையில் திரைப்படத்துறையினர் நலவாரிய புதிய உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், திரைப்படத்துறையினர் நலவாரிய புதிய உறுப்பினர்களின் அறிமுகக் கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் 07.11.2023 இன்று காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

திரைப்படத்துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் மென்மேலும் வாழ்வாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இந்நாள் வரை திரைப்படத்துறையினர் நலவாரியம் மூலம் திரைப்படத்துறை, சின்னத்திரை, அவை சார்புடைய தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் உதவிடும் வகையில் 2,848 பயனாளிகளுக்கு ரூ.95இலட்சத்து 59 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் தற்போது 26,792 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கு நலத்திட்ட உதவி வேண்டி வரப்பெற்ற விண்ணப்பங்களின்படி 122 நபர்களுக்கு ரூ.7,75,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும் என  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும், திரைப்படத்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் இவ்வரசு, திரைப்படத்துறையினர் நலவாரிய நிதி ஆதாரத்தினை பெருக்குவதற்கு படப்பிடிப்பு கட்டணத் தொகையிலிருந்து 50 சதவீத தொகை நலவாரியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையை சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் தொடர்ந்து பாடுபடும் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

திரைப்படத்துறையினர் நலவாரிய உறுப்பினர்களான திரைப்பட தயாரிப்பாளர் முரளிராமசாமி, திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், திரைப்பட நடிகர்  பூச்சி எஸ்.முருகன், திரைப்பட நடிகர்  போஸ்வெங்கட், திரைப்பட இயக்குநர்  மங்கை அரிராஜன், திரைப்பட நடிகர் பிரேம்குமார், திரைப்பட நடிகர் தாடிபாலாஜி, திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஜெ.மதியழகன், திரைப்பட தயாரிப்பு நிருவாகி பாக்கியராஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர் பரிமளவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News