9 தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது
ஆந்திர கடற்கரைக்கு அப்பால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.
2022 மார்ச் 13 அன்று சென்னையில் இருந்து மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றபோது மார்ச் 25 அன்று படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் கடலில் 95 நாட்டிகள் மைல் தூரம் படகு சென்று விட்டது. இதையடுத்து மீனவர்களின் உடனடி உதவிக்காக கடலோர காவல் படையின் கப்பல் பிரியதர்ஷினி அந்தப் பகுதிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டது. இந்தக் கப்பலின் வீரர்கள் படகுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து படகை சீர்செய்தனர். இதனால் படகுடன் 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
இந்த மீட்புப் பணியின்போது கடலோர காவல் படை அதிகாரிகள் படகின் உரிமையாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது தனியாக செல்லாமல் குழுவாக படகுகளில் பயணம் செய்வது கடலில் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிர்க் காக்கும் மற்றும் தகவல் தொடர்புக்கான கருவிகளையும் படகுகளில் வைத்திருக்குமாறும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள பாதுகாப்புப் பிரிவின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் இந்திய கடலோர காவல் படையின் கப்பல் பிரியதர்ஷினி, கடல் மற்றும் வான்வழி ஒருங்கிணைப்புடன் 2022 மார்ச் 29 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை மீட்டுள்ளது.