வருமான வரித்துறை சோதனை: இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது

Update: 2023-09-21 04:51 GMT

காட்சி படம் 

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமாக நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இங்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல கப்பல், லாரி, ரெயில் உள்ளிட்டவற்றில் இருந்து பெரிய கன்வேயர் பெல்ட்டுகள் மற்றும் பல்வேறு மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, 4 நிறுவனங்கள் தயார் செய்து வழங்கின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தேவையான மின்சாதன பொருட்களை வினியோகம் செய்ததில், இந்த நிறுவனங்கள் பல முறைகேடுகள் செய்துள்ளதாக வருமானவரித் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து இந்த நான்கு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில்  போலியாக ரசீதுகளை தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில், நேற்று சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், செங்கல்பட்டு, தியாகராயநகர், எருக்கஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டை, துரைப்பாக்கம், பொன்னேரி ஆகிய இடங்களில் உள்ள இந்த 4 நிறுவனங்களின் தலைமை அலுவலகம், இயக்குனர்களின் வீடுகள், மின்சார வாரியத்துக்கு பொருட்களை வினியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 40 இடங்களில் 250 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும் வருமானவரி துறை அதிகாரிகள் நேரடியாக சென்று, அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரி சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு, ரொக்கம் குறித்து முழுமையாக தெரியவரும் என்று வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News