அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் செப். 20 ல் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Update: 2023-09-15 15:29 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி. (கோப்பு படம்).

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் இளங்கோ ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குறிவைக்கபட்டுள்ளார், பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது, விசாரணையின் போது அமலாக்கதுறை தன்னை ஏன் பா.ஜ.க.வில் சேரக்கூடாது என கேட்கப்பட்டது என வாதிடப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. ஆனால் அமலாக்கப்பிரிவு கைப்பற்றிய பல மின்னணு ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது. தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட பென் டிரைவ்-க்குள் சேர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக 6 நாட்கள் பென் டிரைவ்கள் அமலாக்கதுறையிடம் இருந்தது. கைப்பற்றப்பட்ட பென் டிரைவ்கள் 3 முறை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. விசாரணை ஆவணங்களில் ஒரு முறை கூட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பென் டிரைவ்'களின் சீரியல் நம்பர் குறிப்பிடப்படவில்லை, அமலாக்க துறை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்தது அல்ல, மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டது.

ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவருடைய வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும், எனவே குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் நிலையில் எங்கும் தப்பி செல்ல இயலாது. தற்போது இருக்கும் உடல் நிலை படி 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது, எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார், அதிமுகவில் இருந்த போது நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில், தி.மு.க.வில் சேர்ந்த பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதிடும்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சமாக பெற்ற பணம் வங்கி பரிவர்த்தனை மூலமாக நடந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும், செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி முடித்தாலும் கூட சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. வேறு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் கலைக்கபடக்கூடும்.

மேலும் தற்போதும் அவர் அமைச்சராக இருப்பதால் செல்வாக்கு மிக்க நபராக உள்ளதால் விசாரணை பாதிக்கப்படும், எனவே ஜாமீன் வழங்க கூடாது, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கிட முடியாது எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 20 தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News