அமெரிக்க தேசியப் பொறியியல் அகாடமியின் உறுப்பினராக ஐஐடி பேராசிரியர் தேர்வு
அமெரிக்க தேசியப் பொறியியல் அகாடமியின் உறுப்பினராக ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) ஆசிரியரான பேராசிரியர் ஆர்.ஐ.சுஜித், அமெரிக்காவில் உள்ள தேசியப் பொறியியல் அகாடமிக்கு (National Academy of Engineering - NAE) சர்வதேச உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் துறையில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் குறிப்பாக 'பொறியியல் அமைப்புகளில் உள்ள உறுதியற்ற தன்மைகளைப் புரிந்துகொண்டு இயக்கவியல் அமைப்புகளில் அவற்றைப் பயன்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எப்படி?' என்பது குறித்த பங்களிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சர்வதேச உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இதன் முழுப் பட்டியலை பின்வரும் இணைப்பில் காணலாம் - https://www.nae.edu/289843/NAENewClass2023. இவர் தற்போது ஐஐடி மெட்ராஸ் விண்வெளிப் பொறியியல் துறையில் டி.சீனிவாசன் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும், 'Critical Transitions in Complex Systems' பற்றிய ஆய்வுக்கான உயர்சிறப்பு மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அகாடமிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் விண்வெளிப் பொறியியல் துறையில் டி.சீனிவாசன் ஆராய்ச்சிப் பேராசிரியரான ஆர்.ஐ.சுஜித் கூறுகையில், "இன்று காலையில் இந்தத் தகவலை அறிந்தபோது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. தேசியப் பொறியியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது. பணிக்காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது ஆசிரியர்கள், மாணவர்கள், ஒத்துழைப்பாளர்கள், ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம், அறிவியல் சமூகம், எனது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.
அமெரிக்காவின் தேசியப் பொறியியல் அகாடமிக்குத் தேர்வு செய்யப்படுவது என்பது பொறியாளர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தொழில்முறை அங்கீகாரமாகும்.
பேராசிரியர் சுஜித்துக்கு பாராட்டுத் தெரிவித்த ஐஐடி மெட்ராஸ் டீன் (குளோபல் எங்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, "பேராசிரியர் சுஜித்துக்கு இது ஒரு அருமையான அங்கீகாரம். ஐஐடி மெட்ராஸ்-ல் அவர் எந்த அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றி உள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். அவரது தலைமையில் 'Critical Transitions in Complex Systems' பற்றிய ஆய்வுக்கான உயர்சிறப்பு மையத்தை இக்கல்வி நிறுவனம் அமைத்துள்ளது. பேராசிரியர் சுஜித் தலைமையிலான குழுவினர் உயர்சிறப்பு மையத்தின் மூலம் உலகத் தரம் வாய்ந்த பணிகளை தொடர்ந்து அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
2003-07ம் ஆண்டுகளில் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகப் பதவி வகித்த டாக்டர் பி.என்.சுரேஷ் தேசிய பொறியியல் அகாடமியின் விண்வெளிப் பிரிவுக்குத் தேர்வானார். அதற்கடுத்து இரண்டாவது இந்தியராக பேராசிரியர் ஆர்.ஐ. சுஜித் தற்போது தேர்வுபெற்றுள்ளார். பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவிற்குப் பின் தேசியப் பொறியியல் அகாடமியில் இடம்பெறும் மெட்ராஸ் ஐஐடியின் இரண்டாவது பேராசிரியர் இவர்.
'பொறியியல் ஆராய்ச்சி, பயிற்சி, கல்வி ஆகியவற்றில் மிகச் சிறந்து விளங்குவோருக்கும், பொறியியல் இலக்கியத்தில் பொருத்தமான இடங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்போருக்கும்" அகாடமி உறுப்பினர் பதவி அளித்து கவுரவிக்கப்படுகிறது. புதிய மற்றும் வளரும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னோடியாக இருத்தல், பாரம்பரிய பொறியியல் துறையில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்துதல், பொறியியல் கல்வியில் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்குதல்/ செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்களிப்பை வழங்குவோரும் இப்பதவியால் கவுரவிக்கப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் சுஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர். பிரின்ஸ்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கம்பஷன் (combustion) நிபுணரான பேராசிரியர் சி.கே.லா, "தங்களுக்கு இது மிகத் தகுதியான அங்கீகாரம். இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அறிவியல் அகாடமியின் தலைவரான பேராசிரியர் சென்னுபதி ஜெகதீஷ், "தங்களுக்கு என்ஏஇ உறுப்பினர் பதவி கிடைத்திருப்பதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய தாங்கள் இந்த அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெட்வொரக் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்ட் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் (NSSAC) பிரிவு இயக்குநரும், வர்ஜினியா பல்கலைக்கழக 'பயோகாம்ப்ளக்சிடி' துறையின் புகழ்பெற்ற பேராசிரியருமான பேரா. மாதவ் மராத்தே கூறும்போது "அமெரிக்காவில் உள்ள என்ஏஇ-க்கு தாங்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை சற்றுமுன் பார்த்தேன். மிகச் சிறந்த கவுரவம். வெளிநாட்டு உறுப்பினராக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. மெச்சத்தக்க வகையில் தங்கள் பணி அமைந்துள்ளது. தகுதியின்பாற் கிடைத்த அங்கீகாரத்திற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சுஜித் இதற்கு முன்னரும் மதிப்புமிக்க பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்கவுஸ்டிக்ஸ் அண்ட் வைப்ரேஷன் (IIAV), கம்பஷன் இன்ஸ்டிடியூட் ஆகிய கல்வி நிறுவனங்களின் மதிப்புமிகு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய தேசியப் பொறியியல் அகாடமி, இந்திய அறிவியல் அகாடமி ஆகியவற்றின் உறுப்பினரான இவருக்கு, முனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் 'TUM ambassador' என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் ஃபெல்லோஷிப், முனிக் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்ட் ஸ்டடி (IAS) கல்வி நிறுவனத்தின் ஹன்ஸ் பிஷ்சர் சீனியர் ஃபெலோஷிப் ஆகிய கவுரவங்களையும் இவர் பெற்றுள்ளார். இந்திய தேசியப் பொறியியல் அகாடமியின் இளம் பொறியாளர் விருதையும் இவர் வென்றுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் இவருக்கு ஸ்வர்ணஜெயந்தி ஃபெல்லோஷிப், ஜே.சி.போஸ் ஃபெல்லோஷிப் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.
பேராசிரியர் ஆர்.ஐ.சுஜித் 1988-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-ல் விண்வெளிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1990-ல் எம்.எஸ். பட்டமும், 1994-ல் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.எச்டி பட்டமும் பெற்றார். 390-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வெளியீடுகளை இவர் அளித்துள்ளார் (207 பேராய்வு இதழ் வெளியீடுகள் உள்பட), 14 காப்புரிமைகளைப் பெற்றுள்ள இவர், தெர்மோகோஸ்டிக் இன்ஸ்டெபிலிட்டி குறித்து புத்தகமும் எழுதியுள்ளார். 2009-15ம் ஆண்டுகளில் இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஸ்ப்ரே அண்ட் கம்பஷன் டைனமிக்ஸ் என்ற சர்வதேச இதழின் சீஃப் எடிட்டராகவும் பேராசிரியர் சுஜித் இருந்துள்ளார். தற்போது Chaos: An Interdisciplinary Journal of Nonlinear Science இதழின் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார். இயக்கவியல் அமைப்புகள் மற்றும் சிக்கலான அமைப்புகளுக்கான கோட்பாடுகளைப் பயன்படுத்தி தெர்மோகோஸ்டிக் உறுதியற்ற தன்மையைக் எவ்வாறு குறைப்பது என்ற ஆய்வில் பேராசிரியர் சுஜித் தற்போது ஈடுபட்டு வருகிறார்.