நரபலி கொடுக்க முயற்சிக்கும் தாய்.. சென்னை நீதிமன்றத்தில் கதறிய இளம்பெண்...
வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்க முயற்சிப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் புகார் அளித்துள்ளார்.;
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்தரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் என தெரிவித்து உள்ளார்.
மேலும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்து உள்ளதாகவும், ஏற்கெனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்து உள்ளதாகவும் ஷாலினி சர்மா மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17 ஆம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கி இருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என்றும் மனுவில் ஷாலினி சர்மா தெரிவித்து உள்ளார்.
தன்னை அவர்கள் வலுக்கட்டாயமாக போபாலுக்கு கொண்டு சென்று விட்டால், தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என்றும் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் இளம்பெண் ஷாலினி சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அரசியல் காரணமாக இந்த மனுவை ஷாலினி சர்மா தாக்கல் செய்தாரா? என்ற அடிப்படையில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.