பொதுத்தேர்வு நெருங்கிடுச்சு... உங்க குழந்தையின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நினைவுத்திறனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்ப்போம்.

Update: 2022-03-09 09:11 GMT

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் சில காலம் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிகள் மூலம்  ஆன்லைன் வழி வகுப்புகள் நடந்தப்பட்டன. ஆனால், பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. பல்வேறு தளர்வுகளுக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கான காலம் குறைவாகவே  உள்ளது. ஆனால் ஓராண்டுக்கான பாடங்களில் கவனம் செலுத்தி தேர்வுக்கு தயாராக வேண்டும். அவர்கள் குறுகிய கால கற்றலில் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், விரைவாக கற்று தங்களின் பாடங்களை ஞாபகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையிலும் உள்ளனர்.

மேலும் பொதுத்தேர்வுக்கு இன்னும் 60 நாட்களே உள்ள நிலையில், படித்த  பாடங்களை  ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவு  குறைந்த காலத்தில் விரைந்து கல்வி கற்று தங்களது பாடங்களை எவ்வாறு ஞாபகத்தில் வைத்துக்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் படிக்கவேண்டியது மாணவர்களின் கடமை. அதற்கு ஒரு சிறிய வழிகாட்டல் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ஞாபகம் என்பது பார்ப்பது, கேட்பது, உணர்வது, சுவைப்பது மற்றும் முகர்வது போன்றவைகளை நினைவில் வைத்திருப்பது.  சிலவை நீண்ட நாட்கள் மனதில் பதிந்திருக்கும். ஆனால் சிலவை  உடனே ஞாபகத்தில் இருந்து மறையும் தன்மையுடையன. ஆனால், ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள்பட்ட ஞாபக சக்தியாக மாறும்.

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது ஆர்வம் மற்றும் கவனம் செலுத்துதல். மற்றொன்று திரும்பத் திரும்ப செய்தல். ஆகவே மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் கவனமும் இருத்தல் வேண்டும். பாடத்தை திரும்பத் திரும்ப படிப்பது அவசியம். அப்போதுதான் பாடங்கள் நினைவில் நிற்கும்.

நினைவுத் திறன் அதிகரிக்கும் வழிகள்:

  • தாய் மொழியிலேயே சிந்தித்தல்: ஒருவருக்கு தாய்மொழி சிந்தனையே ஓங்கி நிற்கும். ஆங்கில வழியில் கல்வி கற்கிறார் என்பதால் ஆங்கிலத்தில் கனவு காண முடியாது. அவருக்கு தாய் மொழியில்தான் கனவு வரும். அதனால்  மாணவர்கள் எந்த பாடத்தைப் பயின்றாலும், தாய் மொழியில்  சிந்தித்து மனதில் பதியச்செய்ய வேண்டும். மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படித்தல் சிறப்புக்குரியது.
  • புரியாமல் எதையும் படிக்கக்கூடாது. படிப்பில் முழு கவனம் செலுத்துதல் அவசியம்.
  • பாடத்தைப் படித்தவுடன் எழுதிப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களைத் திரும்பத் திரும்ப வரைந்து பார்க்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு இரவில் குறைந்தது 8 மணி நேரத் தூக்கம் அவசியம். சீக்கிரம் தூங்கி அதிகாலை நேரத்தில் படிக்க வேண்டும்.
  • தூங்கச் சென்றபின், படுத்துக்கொண்டே கண்களை மூடி அன்று படித்த எல்லாவற்றையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்வதால் தூங்கினாலும் நம் மூளை விழிப்புடன் இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சியாகும்.
  • மாணவர்களுக்கு மாவுச் சத்துள்ள உணவுகளைக் கொடுக்கக்கூடாது. அது மந்த நிலையை ஏற்படுத்தும். எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவைக் கொடுப்பது நல்லது.
Tags:    

Similar News